உலகளாவிய என் இணையதள சகோதர அன்பர்களுக்காக,என் முதல் பதிவை தமிழில் படைத்து பெருமகிழ்வு அடைகிறேன்.
இக்கட்டுரையில்,'அலைக்கற்றை(spectrum)' ஊழல் என்றழைக்கப்படும் பகற்கொள்ளை பற்றியும் ஊழல்கள் மலிந்துவிட்ட தேசத்தின் இன்றைய நிலை குறித்தும்,எழுத முயன்றிருக்கிறேன்.இப்பதிவில் 'அலைக்கற்றை' ஊழல் குறித்த ஆழ்ந்த விவரங்களை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.இது,நான் ஏமாளியாக இருக்க வேண்டிய கட்டாயத்தினால் ஏற்பட்ட மனகுமைச்சலுக்கு சிறு வடிகால்,அவ்வளவே.
இவ்வூழல்,தி.மு.க.வின் முதற்கொள்ளை அல்ல என்பதை உம்மில் பெரும்பான்மையினர் அறிவர்.திருக்குவளை அரச குடும்பத்தின் வாரிசுகள்,பகலில் அமைச்சர்களாகவும்,இரவில் கொள்ளையர்களாகவும் இருந்து அரங்கேற்றி வரும் கொள்ளையின் உச்சகட்டம்தான் இந்த 1,76 ,000 கோடி 'அலைக்கற்றை' ஊழல்.இது வரலாறு காணாத பெரும் உழலாக இருப்பதும் ஒருவகையில் இவர்களுக்கு சாதகமாகி இருக்கிறது.எவ்வாறெனில்,தொலைக்காட்சி நிறுவனங்கள்,திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள்,பத்திரிக்கைகள்,வீடு மனை விற்பனைத் தொழில்,விமான நிறுவனங்கள்,பைஞ்சுதை (cement) நிறுவனங்கள்,மணல் கொள்ளை,கட்டை பஞ்சயாத்து என பல்வேறு தொழில்களில் 100 கோடி,200 கோடி என்று பொது சொத்தை சுருட்டி கொண்டிருக்கும் இவர்களின் மாநில அளவிலான திருட்டுகளை சிறிது காலமேனும் மறக்கடித்துவிடும் இந்த தேசிய திருட்டு.
'அலைக்கற்றை' கொள்ளையின் உண்மையான சூத்திரதாரிகளான டாட்டா,அம்பானி,ஏர்டெல் அதிபர் மிட்டல் உள்ளிட்ட பெரு முதலாளிகள்,'ராசா-ராடியா-கனிமொழி' கூட்டணிக்கு பின்னால் ஒளிந்துகொண்டுவிட்டனர்.கொள்ளையின் பெரும் தொகையை பங்கிடுவதில் இந்த முதலைகளுக்கு இடையில் முளைத்த மோதலும்,கருணாநிதி குடும்பத்துக்குள் இருக்கின்ற சச்சரவுகளும் சந்திக்கின்ற சங்கமத்தில்,தவிர்க்க முடியாமல் அம்பலமாகி இருக்கிறது இவ்வூழல்.சி.பி.ஐ விசாரணை,உச்சநீதிமன்ற கண்காணிப்பு,ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட நாடகங்கள் இப்போது அரங்கேறியவண்ணம் உள்ளன.இவற்றை நாம் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கையில்,திரைமறைவில் முதாலளிகளுக்கிடையிலான சமரச பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறது.கடந்த சில மாதங்களில் மட்டும் ஆதர்ஷ் ஊழல்,காமன் வெல்த் ஊழல்,வீட்டு கடன் ஊழல்,வங்கி ஊழல்,அரிசி கடத்தல் என வெளிவந்தவண்ணம் உள்ளது.ஊழலின் தொகையும் 1000 கோடி,௦10000 கோடி என்று உயர்ந்துகொண்டே செல்கிறது.
பத்திரிக்கையில் இவ்வூழல்கள் குறித்து படிக்கும் நாம்,அரசியல்வாதிகளை சபித்துவிட்டு,உயரும் விலைவாசியை சமாளிப்பது குறித்த கவலையில் மூழ்கிவிடுகிறோம்.ஊழல்களுக்கும்,விலைவாசி உயர்வுக்கும் உள்ள உறவு நமக்கு புரிபடுவதில்லை.இந்த பணம் மொத்தமும்,யாரோ யாரிடமோ அடித்த கொள்ளை என எண்ணுகிறோம்.அதோடு நில்லாது,பணத்தை பறிகொடுத்த நாமே,இவையனைத்தையும் ஏதோ கேளிக்கை நிகழ்வை போல கண்டுகளிக்கிறோம்.
இந்த 'அலைக்கற்றை' ஊழலை எடுத்து கொண்டோமேயானால்,400 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றையை அரசிடமிருந்து வாங்கி,அதை 12,000௦௦௦௦௦௦௦ கோடிக்கு டோகோமோ என்ற ஜப்பானிய நிறுவனத்துக்கு விற்று இருக்கிறார் டாட்டா.12,000௦௦௦௦௦௦௦க்கு மேல் இன்னொரு 12,000௦௦௦௦௦௦௦ கோடி லாபம் வைத்து,அலைப்பேசி கட்டணமாக நம்மிடமிருந்து வசூலிக்கிறது டோகோமோ.இது மிக சிறிய உதாரணமே.அன்றாடம் நாம் வாங்கும் மறுஊட்டங்களின்(recharge coupons) மூலம்,1,76,000 கோடியை அடைக்கபோவது நாம்தான்.டாட்டா,அம்பானி மற்றும் மிட்டலின் சொத்து மதிப்பை உயர்த்துகிறவர்களும் நாம்தான்.இதற்கு ஏற்பாடு செய்து தரும் ராசா போன்ற அமைச்சர்களுக்கு கொடுக்கும் லஞ்ச பணத்தை நம்மிடமிருந்துதான் உறிஞ்சி எடுக்கிறார்கள் இம்முதலாளிகள்.
இன்றைய சூழலில் லஞ்சமும்,ஊழலும் முதலாளிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் வாய்த்த வரபிரசாதமாக இருக்கிறது.அவற்றால் நமக்கு ஏற்படும் பாதகங்கள் குறித்து எள்ளளவும் அவர்கள் வருந்துவதில்லை.ஒரு முதலாளி இரண்டு ருபாய் லஞ்சம் கொடுப்பாராயின்,பத்து ருபாய் லாபம் எடுத்துவிடுகிறார்.மொத்தத்தில்,அந்த பன்னிரண்டு ரூபாயும் மறைமுக வரியாகவும்,விலைவாசி உயர்வாகவும் நம் தலையில்தான் விடிகிறது.12000 கோடிக்கு விற்றிருக்க கூடிய அலைகற்றையை,400 கோடிக்கு டாட்டாவுக்கு அளித்தது சட்டபூர்வமானது என்கிறார்கள்.சென்னையில் 650 கோடி ருபாய் முதலிட்டு இருக்கும் நோக்கியா நிறுவனத்துக்கு,வருடத்திற்கு 500 கோடிக்கும் மேல் மானியம் வழங்குகிறது தமிழக அரசு.400க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பழங்குடி மக்களை அகற்றிவிட்டு,அந்நிலங்களை டாட்டாவின் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமாக்குகிறது சத்தீஸ்கர் மாநில அரசு.இவ்வாறு,ஆறுகள்,குளங்கள்,மலைகள்,காடுகள்,விளைநிலங்கள்,பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் விலைப்பேசி பன்னாட்டு நிறுவன முதலாளிகளிடம் ஒன்றன் பின் ஒன்றாக ஒப்படைத்து வருகிறார்கள்.அதோடு நில்லாது,இவ்வாறு செய்வதின் மூலம் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை உயர்த்தவும்,வேலை வாய்ப்புகளை பெருக்கவும் முடியும் என கட்சி வேறுபாடின்றி அனைத்து ஆட்சியாளர்களும் சொல்கின்றனர்.ஆகையால்தான்,மேற்கண்டவை அனைத்தும் சட்டபூர்வமாகவே அமல்படுத்தபடுகின்றன.
தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் உள்ளிட்டவைகள் நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுவதிற்கு மாறாக,ஊழலின் புதிய பரிமாணங்களாக மாறியிருக்கின்றன.ஊடகங்களும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மட்டுமே மக்கள் விரோதிகளாக சித்தரிக்கின்றனவே தவிர இவை அனைத்துக்கும் மூலக்காரணமாக விளங்கும் பன்னாட்டு நிறுவன முதலாளிகளின் முகத்திரை கிழிக்க தவறுகின்றன.தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமலாக தொடங்கிய 1990க்கு பிறகு ஊழல்களின் எண்ணிக்கையும்,முதலாளிகளின் சொத்துகளும் வெகுவாக உயர்ந்திருகின்றது.எனினும்,இதுவரை எவரேனும் தண்டிக்கபட்டிருகிறார்களா..? அல்லது இவர்களின் ஊழல் சொத்துக்கள்தான் பறிக்கபட்டிருகிறதா...?? முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான,'வருமானத்திற்கு அதிகமாக 55 கோடி சொத்து குவித்த வழக்கு',கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிற நிலையில்,176000 கோடி ரூபாய்க்கான ஊழல் வழக்கை முடிக்க எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்பதை எண்ணுகையில் நமக்கு தலைசுற்றலே வந்துவிடும்.இவர்களுக்கு மாறி மாறி வாக்களிக்கும் நாம் ஊழலை ஒழிப்பது குறித்து எண்ணுவது அநாவசியமே.
இன்று சகல விதமான கொள்ளைகளும் சட்டபூர்வமாகிவிட்ட சூழல் நிலவுகிறது.நீதிமன்ற வாதங்கள் உபயோகமற்று போய்விட்டன.ஒரு நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே,அந்நாட்டை படைபலத்தைக்கொண்டு ஆக்கிரமிக்கிறது,உலக வல்லரசு என தம்பட்டம் அடித்துகொள்ளும் இன்னொரு நாடு.ஆனால் இங்கு,அவ்வாறான அவசியங்கள் ஏதுமின்றி நம் வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வெகு சுலபமாக தாறைவார்த்து வருகின்றனர் நம் அரசியல்வாதிகளும்,பெரு முதலாளிகளும்.70 லட்சம் கோடிக்குமேல் இவர்களின் கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கபட்டிருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.இன்றைய சூழலில்,ராசாவோ,அழகிரியோ,மாறனோ வரும் தேர்தலில் தொற்றுவிடுவோமென்று அஞ்சுகிறார்களா....?? இல்லவேயில்லை.தோற்றாலும் அவர்கள் குவித்துள்ள சொத்துகள் அடுத்த நூறு தலைமுறைக்கு காணும்.
'அலைக்கற்றை' ஊழல் குறித்த செய்திகள் தி.மு.க. அளித்த இலவச தொலைக்காட்சி பெட்டியின் மூலமே மக்களிடம் பரவி வருகிறது.எனினும்,இலவச தொலைக்காட்சி வழங்கும் திட்டத்திற்காக மேலும் 10 லட்சம் தொலைக்காட்சி பெட்டிகள் கொள்முதல் செய்யபட்டிருப்பதாக அறிவிக்கிறார்கள்.ஆக,தி.மு.க. இன்னமும் தொலைகாட்சியை தன் ஆயுதமாக கருதுவது புரிகிறது.ஏனெனில்,ஊடகங்களை,மிக சாமர்த்தியமாக பயன்படுத்துவதில் தி.மு.க.வுக்கு நிகர் எவருமில்லை.இன்று,இவர்கள் 'அலைக்கற்றை' ஊழலை,இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொண்டே மறக்கடிக்க முயன்று வருகின்றனர்.எவ்வாறெனில்,108 திரிவூர்தி சேவை(ambulance) மற்றும் தமிழக அரசின் குடிசைகளுக்கு பதில் திண்காரை(concrete) வீடுகள் கட்டித்தரும் திட்டங்களுக்கான விளம்பரத்திற்காக 1.5 கோடிக்குமேல் அவர்களின் குடும்ப அலைவரிசைகளான சன் தொலைக்காட்சிக்கும்,கலைஞர் தொலைக்காட்சிக்கும் அளிக்கபட்டிருப்பதை,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அறிய முடிகிறது.இவ்வாறு அவர்கள் நலனுக்காகவும், மேன்மைக்காகவும் மக்கள் வரிபணத்தை கொட்டி,விளம்பரம் கொடுக்கிறார்கள்.அதிலும்,இவை சாதரணமான விளம்பரங்கள் அல்ல.மக்கள் மனதை தொடும்படியாக,மிகுந்த நுணுக்கத்துடன் தயரிக்கபட்டவைகள் ஆகும்.இவ்வாறு,மக்களை தங்களுக்கு சாதகமாக திருப்ப,நம் வரிப்பணத்தை கொண்டே முயற்சித்து வருகின்றனர்.
இவர்களை தேர்தலில் மட்டுமே தண்டிக்கமுடியும் என்று நீங்கள் எண்ணுவீர்களேயானால்,அவர்களும் ருபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டுதான் இருப்பர்,உமது 'வாக்கை' விலை பேச.வெறுமனே இயலாமையை மட்டும் வெளிப்படுத்தி கொண்டிருந்தால் அனைத்தும் கைமிஞ்சி போய்விடும் சூழல் கண்கூடாக தெரிகிறது.இனியும் சுயநலத்துடன் மட்டுமே செயல்படுவோமேயானால்,மதங்கள் பல நடைமுறையில் இருக்கும் நம் தேசத்தை எந்த கடவுளாலும் காக்க இயலாது.
(பின்குரிப்பு : இது என் முதல் பதிவு என்பதால் பிழைகளை மன்னிக்க வேண்டுகிறேன்.மேலும் ஊழல்களை அகற்றுவது குறித்த உமது கருத்துக்களை பின்னுட்டமாக தெரிவிக்கலாம்)



என்றும் மக்கள் சுயநலத்துடன் மட்டுமே செயல்படுவார்கள்....
ReplyDeleteநன்றி.
"Raise phoenix,u cant b ashes anymore."// I like this quotation imaya varamban. Now iam out of station. within a week i will read your article and will comment. but in my opinion, to start writing is the problem. when we starts, it will come nice. chiththiramum kaip pazhakkam.
ReplyDelete@ Bagyaraj : let's think positive'daa....
ReplyDelete@ அன்பென்று கொட்டு முரசே : Thanks a lot for visiting my page and for your valuable suggestions madam....
That's correctna im already aware that
ReplyDeleteSuper Imay..... Unga kitta irundhu naan innum edhir paakuren......
ReplyDelete